உலகிலுள்ள ஆன்மாக்களை உய்வித்துப் பரம்பொருளோடு இரண்டறக் கலக்கும் வழியைக் காண்பிப்பவர்கள் மகான்கள் ஆவர். சௌராஷ்ட்ர இனத்திலும் அப்படிப்பட்ட மகான்கள் பலர் தோன்றி வழிகாட்டியுள்ளனர். அவர்களுள் எல்லோராலும் அறியப்பட்டவரும், எளிய சொற்களால் சௌராஷ்ட்ரம் மற்றும் தமிழில் கீர்த்தனைகள் பாடி, ஆடிப் பரவசமடையச் செய்தவரும். கிருஷ்ணபக்தியைப் பரப்ப நாயகி பாவத்துடனும் , பாவனையுடனும் வலம் வந்தவர் ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் ஆவார்.
இம்மகான் மதுரையம்பதியில் ஜாபாலி கோத்திரம் சின்னக் கொண்டா. ஸ்ரீ ரங்கார்யருக்கும். ஸ்ரீமதி லட்சுமி அம்மையாருக்கும் ஐந்தாவது மகவாக 9.1.1843 குருவாரமன்று அவதரித்தார். ராமபத்ரன் என்று பெயர் சூட்டப்பட்ட அக்குழந்தை பள்ளிப்படிப்பில் நாட்டமின்றி கணக்கர் வேலையில் இணக்கமின்றி, தறி வேலையிலும் புரிதலின்றிச் செயல்பட்டது. குழந்தையின் வேட்கையெல்லாம் படைத்தவனை அடைந்திரும் ஞான நெறியில் இருந்தது.
இந்நிலையில் குடும்பத்துடன் மதுரையை விட்டுக் கும்பகோணம் வந்து பன்னிரண்டு ஆண்டுகள் வாழும் நிலை ஏற்பட்டது. இளமைப்பருவம் கும்பகோணத்திலேயே கழிந்தது. பெற்றோர் திருமண ஏற்பாடுகளைச் செய்வதறிந்த ராமபத்ரன் வீட்டை விட்டு வெளியறி யோகமார்க்கத்தில் திளைக்கத் திருப்பரங்குன்றம் வந்தடைந்தார். பன்னிரண்டு ஆண்டுகள் கடுந்தவத்திலிருந்து யோக சித்திகளைப் பெற்றார்.
பின்னர் பரமக்குடிக்குச் சென்று ஸ்ரீ நாகலிங்க அடிகளைத் தரிசித்து அவரிடம் யோகக்கலையைப் பயின்று சதாநந்த சித்தராகப் புறப்பட்டார். இவரைச் சந்தேகித்த சிவகங்கை மன்னன் சோதனை என்ற பெயரில் பல இன்னல்களை விளைவித்தான். இறுதியாக 48 நாட்கள் சமாதியிலிருக்க உத்தரவிட்டான். புன்னைகையோடு ஏற்ற சுவாமிகள் நிர்விகலப சமாதியில் அமர்ந்தார். குழியிலிருந்த அவரது மேனி சுண்ணாம்பு காரை, மண்ணால் மூடப்பட்டது. கெடு முடிந்ததும் சமாதி் திறக்கப்படாமலேயே சுவாமிகள் மதுரைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். சக்தி மிகுந்த சித்தரை சோதனை செய்ததை எண்ணி மன்னன் மிகவும் வருந்தினான்.
தென்திசை நோக்கிப் பயணித்த சுவாமிகள் ஆழ்வார் திருநகரியை அடைந்தார். தான் இனிச் செல்ல வேண்டிய மார்க்கத்திற்கு வழிகாட்ட இருக்கும் இத்திருந்தலத்தில் வடபத்ரஅரையர் என்ற மகானைக் குருவாக ஏற்றுப்பணிந்தார்.
அன்று முதல் திருமாலை முழுமுதற்கடவுளாகவும். பக்தி நெறியையும். அதனை மக்களிடையே பரப்புவதையும் தன் குறிக்கோளாகக் கொண்டார்.
ஸ்ரீ வில்லிபுத்தூரை அடைந்த சுவாமிகள் மண்ணை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் நாயகிபாவத்தில் பக்தி பூண்டு சித்தி அடைந்த ஸ்ரீ ஆண்டாளின் வழியில் பக்தி நெறியைப்பரப்ப எண்ணம் கொண்டு புறப்பட்டார்.
ஸ்ரீரங்கம் சென்ற சுவாமிகள், நடனகோபாலனை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் கீர்த்தனைகளைப் பாடி ஆடினார். இதனைக் கண்ணுற்ற ஜீயர் சுவாமிகள், நாயகி பாவத்தில் திளைத்த இம்மகானுக்கு நடன கோபால நாயகி என்றே பெயர் சூட்டினார்.
பலதிவ்ய தேசங்களைத் தரிசித்துக் கொண்டே திருப்பதி திருமலைவாசனையும் தரிசிக்க யாத்திரை மேற்கொண்ட நாயகி சுவாமிகள் 1903 ஆம் ஆண்டு திருபுவனம் வந்தார். நாயகி பாவத்தில் கண்ணனைப்பாடி ஆடிக் களித்து உஞ்சவிருத்தி மேற்கொண்ட சுவாமிகளிடம் பலர் சீடராக இணைந்தனர்.
அப்போது திருபுவனம் சன்னதித் தெருவில் மிராசு மற்றும் தொழிலதிபராக வாழ்ந்த நாகு.கு.அழகிரிசாமி அய்யர் - சீதாலெட்சுமிஅம்மாள் தம்பதியர் நாயகி சுவாமிகளை வணங்கி, அவர் திருபுவனத்தில் இருக்கும் வரை தங்கள் இல்லத்திலேயே தங்கி அமுது உண்ணவும் வேண்டினர். ஆனால் சுவாமிகளோ, தான் சந்நியாச தர்மத்தில் இருப்பதால் இல்லத்திற்குள் வாசம் செய்வது தகாது எனவும், உஞ்சவிருத்தி செய்து கிடைத்த பண்டத்தைத் தானே சமைத்து உண்பதே நெறி எனவும் கூறி மறுத்து விட்டார். தம்பதியர் தங்கள் கைங்கர்யத்தை ஏற்றே ஆக வேண்டும் என வற்புறுத்தவே, சுவாமிகள் மேற்படி வீட்டின் திண்ணையில் அடுப்பு வைத்துச் சமைத்துக் கொள்ள மட்டும் ஒப்புதல் அளித்து அவ்வாறே செய்தும் வந்தார்.
ஒரு நாள் நாயகி சுவாமிகள் திருப்பதி யாத்திரைக்கு விடைபெற்ற போது நாகு தம்பதியர் தங்களுக்கு நெடுநாளாக மனக்குறை ஒன்று இருப்பதாகவும், அதைத் தீர்த்து அருள வேண்டும் என்றும் மனதார வேண்டினர். சுவாமிகளும் தான் திருப்பதி சென்று மீண்டும் திரும்பி வரும் போது தங்கள் மனக்குறை தீர்ந்திருக்கும் என்று அருளாசி வழங்கிப் புறப்பட்டார்.
குழந்தைப்பேறு இன்மையே நாகு தம்பதியரின் மனக்குறை, சில மாதங்களில் சீதாலட்சுமி அம்மையார் கருவுற்றார். அழகான ஆண்மகவு பிறந்தது. நாயகி சுவாமிகளின் அருளாசியை எண்ணித் தம்பதியர் பெரு மகிழ்ச்சியடைந்தனர். ஆசி வழங்கிய மகானுக்கு உள்ளம் குளிர ஏதேனும் வழங்க அவரது வருகையை எதிர்நோக்கியிருந்தனர்.
இரண்டாண்டுகளுக்குப் பின் திருமலை தரிசனம் முடிந்து திருபுவனம் திரும்பினார் சுவாமிகள். வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த நாகு தம்பதியர் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர். சீதாலட்சுமி அம்மையார் தனது மனதில் சங்கல்பித்துக் கொண்ட படி பட்டு சேலை, வளையல், மஞ்சள், காலில் அணியும் கொலுசு முதலிய மங்கல பொருட்களை் பெற்றுக் கொள்ள சுவாமிகளிடம் சமர்ப்பித்தார்.
தான் இது நாள் வரை மனதால் மட்டும் கண்ணனின் நாயகியாக இருந்து வந்ததை ஏற்ற கண்ணபிரான். இனி உடலாலும் நாயகியாக மாறத் திருவுள்ளம் கொண்டான் போலும் என நினைத்த நாயகி சுவாமிகள் அங்கேயே பட்டுச் சேலையை உடுத்திக் கொண்டார். மஞ்சள் பூசி வளையல் அணிந்தார் . கண்ணனைப்பாடி நடனம் ஆடினார். அவர் பட்டுச் சேலை உடுத்தி நடனமாடிய இடமே இன்று இந்தியாவின் மிகப் பெரும் பட்டுக் கூட்டுறவு சங்கமாக உருவெடுத்துள்ளது.
நாகு தம்பதியர் நாயகி சுவாமிகள் மற்றும் சீடர்களுக்கு பஜனை மற்றும் ஆராதனை மேற்கொள்ள வடக்கு வீதியில் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் மடத்தை ஸ்தாபனம் செய்ய நாகு தம்பதியர் ஒப்புதல் அளித்து பஜனை மற்றும் இதர வையவங்கள் நடைபெற்றன. மதுரை சென்று மீண்டும் 1907 ம் திருபுவனம் வருகை புரிந்த சுவாமிகள் சிஷ்யர்களுக்கு திவ்வியப்பிரபந்தங்களை இசையுடன் கற்றுக் கொடுத்து சனிக்கிழமை பஜனை. கிருஷ்ண ஜெயந்தி மற்றும் மாட்டுப் பொங்கல் அன்று உஞ்சவிருத்தி செய்து அமுதுபடைத்து ராமானுஜ நூற்றந்தாதி சேவித்து சீடர்களுடன் சமாராதனை மேற்கொண்டார். பின்னர் தம் சிஷ்யர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். நாயகி சுவாமிகள் சிஷ்யர்களுடன் புகைப்படம் எடுத்தது திருபுவனத்தில் மட்டும் தான்.
நாயகி சுவாமிகள்புறத் தோற்றத்தாலும் நாயகியாக உருவெடுத்தது இதே திருபுவனத்தில் தான்!
நாயகி சுவாமிகள் ஆராதனை செய்த ஸ்ரீ நடனகோபாலன், ஸ்ரீ நிவாசன், ஸ்ரீ ராமன் ஆகிய விக்கிரகங்களை வைத்துப் பூஜிக்கத் தாராளமான இடம் தேவை என்று எண்ணிய நாகு. அழகிரி அய்யர் மற்றும் நாகு கிருஷ்ணசாமி அய்யர் இருவரும் சன்னதித் தெருவில் புதிய இடம் வாங்கி, சீடர்களின் துணையுடன் 1928ல் விக்கிரங்களை எழுந்தருளச் செய்து எல்லா வைபவங்களையும் நடத்தத் தொடங்கினர்.
பின்னர் 1980 ஆம் ஆண்டு திரு. (சிவலிங்கா) எஸ். எஸ். துளசிராம் அய்யர் தலைமையில் மடத்தை ஜீர்ணோத்தாரணம் செய்து மதுரை ஆத்மஞானி திரு. கே. எல். என்.ஜானகிராம் முன்னிலையில் சம்ப்ரோட்சணம் நடைபெற்றது.
மேற்படி ஸ்ரீ நடன கோபால சுவாமி நாலாயிர திவ்ய ப்ரபந்த பஜனை மடம் உள்ள கட்டிடம் புதிதாகத் திருப்பணி செய்து பொலிவுடன் விளங்க நாயகி பக்தர்கள் முனைந்து 2024 ஆம் ஆண்டு திருப்பணி செம்மையாக நடைபெற ஏற்பாடு செய்துவருகின்றனர்.
- திருப்பணி கமிட்டியார் -